Tamilnadu

சென்னையில் முதல் முறையாக ரூ.90ஐ கடந்தது பெட்ரோல் விலை..  மக்களின் துயரத்தில் குளிர்காயும் மோடி அரசு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும், வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

அவ்வகையில் அண்மை நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய நிலவரப்படி 89.91ரூபாய் என விற்பனையான நிலையில் 22 காசுகள் அதிகரித்து இன்று 90.13 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை நேற்று 82.85ரூபாய் விற்பனை ஆன நிலையில், 28 காசுகள் அதிகரித்து 83.13 ரூபாய் என விற்பனையாகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலையால் நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்கத்தைப் போன்று நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.