Tamilnadu

“சொந்த வீட்டுக்காரரையே வெளியே தள்ளுவதா?”: KV பள்ளிகளில் திட்டமிட்டு தமிழ் மொழியை புறக்கணிக்கும் மோடி அரசு

நம் மாநில மொழி உரிமையை மீட்டெடுப்பதில், மாநில அரசு உறுதியாக செயல்படவேண்டும். மொழி உரிமை பறிபோக ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என தினகரன் நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. பொதுவாக, தமிழகத்தில் மத்திய அரசின் நிறுவனங்கள் கால் பதித்தால், தமிழக அரசின் தடையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) பெற வேண்டியது அவசியம். ஆனால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவக்க, மாநில அரசின் தடையின்மை சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதனால், கேந்திரிய வித்யாலயா பள்ளியை, தமிழக அரசு எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம், இந்தி மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழ்மொழி கட்டாயப்பாடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி அடைந்தால் மட்டுமே 6-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்புக்குச் செல்ல முடியும் என்பது மற்றொரு உத்தரவு. சமஸ்கிருதத்துக்கு பதில், தமிழை மொழிப் பாடமாக எடுத்து, தமிழக மாணவர்கள் படிக்க முடியாது என்பது வேதனையிலும் வேதனை.

இந்த உத்தரவு, தமிழ் நெஞ்சங்களை பதற வைக்கிறது. சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவிட்டு, தமிழ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்குரிய வசதியை செய்து தராமல் கை விரிப்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. தமிழக அரசின் கொள்கை திட்டமாக 50 ஆண்டுகளாக தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை அமலில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழ் மொழிக்கு இடமில்லை என்று கூறுவது, சொந்த வீட்டுக்காரரையே வெளியே தள்ளுவதற்கு சமமாகும். தமிழகத்தில், தமிழ் மொழி புறக்கணிப்பை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த அநீதி தடுக்கப்பட வேண்டும். வடமாநிலங்களில் இருந்துகொண்டு இந்தி மொழிக்கு இடமில்லை என அறிவித்தால் அங்குள்ள தலைவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

எனவே, தமிழகத்தில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழை கட்டாய பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே இது நடக்கும். தமிழர்களையும், தமிழ் மொழியையும் காப்பதில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் எந்த சமரசத் துக்கும் இடம் கொடுக்கக்கூடாது.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினால் மட்டும் போதாது. “தமிழ் மக்களே... வணக்கம்...” என மேடைக்கு மேடை பேசினால் மட்டும் போதாது. மாநில மொழி உரிமையைப் பறிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழ் மண்ணில் இருந்தபடியே, டெல்லியில் இயங்கும் மத்திய அரசை ஆட்டிப்படைத்த காலம் ஒன்று உண்டு. அன்றைய தலைவர்களை நினைவு கூர்ந்து, நம் மாநில மொழி உரிமையை மீட்டெடுப்பதில், மாநில அரசு உறுதியாக செயல்படவேண்டும். மொழி உரிமை பறிபோக ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.” என தெரிவித்துள்ளது.

Also Read: “இனி கார்ப்பரேட் முதலாளிகள் கை நீட்டும் நபருக்கு அரசு பணி” : தனியார் வசம் செல்லும் செயலாளர்கள் நியமனம்!