Tamilnadu

“தொடரும் தீண்டாமை கொடுமை” : தலித் இளைஞர் அடித்து கொலை - கோவையில் நடந்த கொடூர சம்பவம் !

கோவை மாவட்ட சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூர் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், தினக்கூலி வேலையை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலை முடிந்து வந்த ஆரோக்கியராஜ், வீட்டின் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று புரோட்டா வாங்கியுள்ளார். அப்போது புரோட்டாக்கு தேவையான அளவு குருமா இல்லாததால், கூடுதலாக குருமா கேட்டுள்ளார். அப்போது கடையின் உரிமையாளர் கரிகாலன், “நீ கொடுத்த காசுக்கு தகுந்தவாறு குருமா கொடுத்துள்ளேன். இதற்கு மேல் கொடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

அப்போது கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு குருமா கொடுக்கும் படி ஆரோக்கியராஜ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் ஆரோக்கியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் அடிதடி சண்டையாக மாறியுள்ளது.

அப்போது புரோட்டா மாஸ்டர் கருப்பசாமி, ஓட்டல் உரிமையாளர் கரிகாலன் மற்றும் அவரின் நண்பர் முத்து ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆரோக்கியராஜை அடித்து உதைத்தனர். மேலும் ஆரோக்கியராஜை தள்ளிவிட்டதில் பின்னந்தலையில் அடிப்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். மயக்க நிலையில் இருந்த போதும் ஆரோக்கியராஜை 3 பேரும் சரமாறியாக தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டு ஆரோக்கியராஜை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து உறவினர்கள் திரண்டு வந்து கடையை சூறையாடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களை சமாதானம் செய்து கருப்பசாமி, கரிகாலன் மற்றும் முத்து ஆகியோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆரோக்கியராஜின் மனைவி அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்து உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கொலை மற்றும் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சொந்த வீட்டுக்காரரையே வெளியே தள்ளுவதா?”: KV பள்ளிகளில் திட்டமிட்டு தமிழ் மொழியை புறக்கணிக்கும் மோடி அரசு