Tamilnadu

யானைகளிடமும் புத்தியை காட்டிய அ.தி.மு.க அமைச்சர்கள்: எப்போது திருந்துவார்கள்? - விலங்கு ஆர்வலர்கள் கோபம்!

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. தமிழக வனத்துறையின் அலட்சியத்தால் சில மாதங்களில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட யானைகளை பலிகொடுத்துள்ளோம். யானைகளைக் காப்பதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனப் பகுதியில் நடைபெற உள்ளது. இன்று தொடங்கி 48 நாட்கள் இந்த முகாம் நடைபெறும். இந்த முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு உடல் பரிசோதனை, சிகிச்சை, உடல் எடை பராமரிப்பு, மூலிகை உணவு உள்ளிட்டவை வழங்கப்படும்.

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் யானைகள் லாரிகள் மூலமாக தேக்கம்பட்டி வந்தடைந்து, முகாம் துவக்க விழாவிற்காக காத்திருந்தன.

ஆனால், அ.தி.மு.க அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் வருகையில் தாமதம் ஏற்பட்டதால், யானைகள் மற்றும் பாகன்கள் பல மணி நேரமாகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

அ.தி.மு.க ஆட்சியாளர்கள் மக்களை வதைப்பது போதாதென்று, வன விலங்குகளையும் கொடுமைப்படுத்தி வருகிறார்கள் என விலங்கு நல ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Also Read: செயின் பறிப்பு முயற்சியின்போது கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளி கொலை - முன்னாள் இராணுவ வீரர் கைது!