Tamilnadu

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 3வது நாளாகப் போராட்டம்: அ.தி.மு.க அரசை கண்டித்து முழக்கம்!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எழிலகத்தில் மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும், இருபத்தி ஒரு மாத ஊதிய நிலுவையை அளித்திட வேண்டும், அரசு துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் தொடர் மறியலிலும் சிறை நிரப்பும் போராட்டத்திலும் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளாக சென்னை எழிலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வம் கூறுகையில், தமிழக அரசு உடனடியாக அரசு ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஆசிரியர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தின்போது அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அ.தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Also Read: உலகின் கொடுங்கோல் சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இணையும் இந்தியா? - மோடி அரசின் லட்சியம் இதுதானா?