Tamilnadu

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: 2009 அரசாணை அமல்படுத்தாதது ஏன்? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் வழக்கு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், தமிழகத்தில் முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாகவும், அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த 2009ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை 354ஐ அமல்படுத்தாதது, அரசு மருத்துவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read: “அரசு ஊழியர்களை அழைத்து பேசாத முதலமைச்சர்.. பிரதமரை போல் பிடிவாதம் பிடிக்கும் பழனிசாமி” - மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது, அரசாணையை வெளியிட்ட அரசே அதை அமல்படுத்தாததால், கடந்த 11 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கௌதமன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து 2009ஆம் ஆண்டு அரசாணை அமுல்படுத்தப்படுமா, அமல்படுத்தப்படாதா என பிப்ரவரி 3ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Also Read: “செவிலியர்கள் கேட்பது பிச்சையல்ல; அவர்களது உரிமை..” பணி நிர்ந்தரம் செய்யாத அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்!