Tamilnadu

மின் வேலியில் சிக்கி பலியாகும் வன விலங்குகள்.. முதல் முறையாக விழிப்புணர்வு பிரசாரம் செய்த வனத்துறை!

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சமீப காலங்களாக உதகை மற்றும் கிராம புறங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் அதிக அளவில் உணவு தேடி வருகின்றன.

இதில் காட்டு யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் சில விவசாயிகள் தங்களது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து அதில் மின்சாரத்தை நேரடியாக பாய்ச்சுகின்றனர்.

அதில் சிக்கி வன விலங்குகள் பலியாவது தொடர்கிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் சின்ன குன்னூர் பகுதியில் காட்டு யானை ஒன்றும் உதகை நகரில் காட்டெருமை ஒன்றும் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தன.

இதனையடுத்து மின்வேலியில் சிக்கி வன விலங்குகள் இறப்பதை தடுக்கும் விதமாக வனத்துறையினர் விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

அதற்காக உதகை வடக்கு வனச்சரக வனத்துறையினர் சுமார் 5 ஆயிரம் துண்டு பிரசூரங்களை அச்சடித்து கிராமம் கிராமமாக சென்று துண்டு பிரசூரங்களை விநியோகம் செய்யும் பணியை இன்று முதல் தொடங்கி உள்ளனர்.

அந்த துண்டு பிரசூரங்களில் மின்வேலி அமைப்பதால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதற்கான தண்டனைகள் குறித்தும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்டும் தீமைகள் குறித்தும் விரிவாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் கோடை காலம் விரைவில் தொடங்க உள்ளதால் காட்டு தீ ஏற்படுத்த கூடாது மீறுபவர்கள் மீது எடுக்கபடும் நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடபட்டுள்ளது.

Also Read: “4 மாதங்களில் அதிகரித்த வனக்குற்றங்கள்; கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு”: கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!