Tamilnadu

“தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை பறைசாற்றும் கீழடி” : விரைவில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவக்கம் !

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை 6 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கான ஒப்புதலை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது.

கீழடி பகுதியில், பத்து அடியில் குழிகள் பறித்து தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது. முன்னதாக நடைபெற்ற இந்த அகழாய்வில், பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் விதமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது, 6 கட்ட அகழ்வாராய்ச்சியில் 2,600 ஆண்டுகள் பழமையான பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், மனித எலும்புக்கூடுகள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும், கீழடியில் செய்யபட்டு வரும் ஆய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை, வைகை நதிக்கரை நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என்று தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற கீழடி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களிலும் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இன்று அல்லது நாளை அகழ்வாராய்ச்சி துவங்க உள்ள தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் - வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்!