Tamilnadu

மதுரையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்.. 20 நாட்களில் 45 பேர் பாதிப்பு - 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிற சூழ்நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு பொது மக்களிடையே மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மதுரையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் 20 நாட்களில் 45 பேர் பாதிக்கப்ப்பட்டுள்ளனர்.

மேலும் இதில் 7 வயது சிறுவன் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும். துவக்கத்தில் சற்று மெதுவாகப் பரவி, அக்டோபரில் 6 பேரும் நவம்பரில் 14 பேரும் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து டிசம்பரில் பரவல் வேகமானது. இந்நிலையில், இந்த மாதத்தில் மட்டும் 45 பேர் டெங்கு தாக்கியது. இந்த மாதம் டெங்குவின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் முதல் 20 நாட்கள் மட்டும் 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் பாதிப்பு அதிகரிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

இந்த நிலையில், மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியா என்பவரின் மூத்த மகன் மிருத்தின் ஜெயன் மற்றும் இரண்டாவது மகன் திருமலையஸ் இருவருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மிருத்தின் ஜெயன், திருமலையஸ் ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தக்கப் பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திருமலையஸ் என்ற 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தில் இரு சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு 7 வயது சிறுவன் பலியானது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வுகளை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க... எளிதாக ‘நிலவேம்பு குடிநீர்’ தயாரிப்பது எப்படி? #HealthTips #Dengue