Tamilnadu
"சித்ரா தற்கொலைக்கு காரணம் இதுதான்" - சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை அறிக்கை தாக்கல்!
சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், பின்னர் சித்ராவின் கணவர் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தன் மனுவில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவோ, அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனத் தெரிவித்திருந்தார்.
தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை எனவும், எந்தக் குற்றமும் செய்யாத தனக்கு ஜாமின் வழங்கவேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில், ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் சார்பிலும், அவரது நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயமோ, தடமோ அவரது கழுத்தில் இல்லை என அவரது பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தேகம் கிளப்பினர்.
தற்கொலை தான் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹேம்நாத்தின் ஜாமின் வழக்கில் இடையீட்டு மனுதாரராக அவரது நண்பர் சையதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலிஸார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!