Tamilnadu
“சினிமா பாணியில் மருத்துவரிடம் ஒன்றரை கோடி கொள்ளை” : 12 வருடங்களாக தலைவராகி இருந்த குற்றவாளி கைது !
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ராமதாஸ். இவர் அப்பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தான் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறேன். அதேபோல், மற்றொரு மருத்துவமனையை தொடங்க நாகர்கோவிலில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலத்தை வாங்கி மருத்துவமனை அமைக்கும் பணியை தொடங்கினேன்.
அப்போது, “தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அருள் முருகன் என்பவர், வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினால் ரூ.50 கோடியை கடனாக பெற்று தருவதாக கூறினார். இதற்காக அருள்முருகன் கமிஷன் அடிப்படையில் ஒன்றரை கோடி தரவேண்டும் என கூறினார்.
இதனை தொடர்ந்து, அருள்முருகன் என்னிடம் இருந்து ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பெற்றுக்கொண்டார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அருள் முருகனின் வீட்டிற்கு சென்றேன். ஆனால், அங்கே அவர் அளித்த முகவரியில் அருள் முருகன் என்ற நபர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், அவர் வழக்கறிஞர் இல்லை என்றும் பண மோசடி செய்ததையும் அறிந்தேன். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான அருள் முருகனை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வைத்து அருள் முருகனை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் போலி வழக்கறிஞர் என்பதும் அவர் கொடுத்த முகவரிகள் அனைத்தும் போலியானது என்பதும் தெரியவந்தது.
பின்னர் அருள் முருகனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காலான்கரை என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் மீது கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய போலிஸ் நிலையங்களில் கொலை வழக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட அவர் தனது தோற்றத்தை பல்வேறு விதமான வகையில் மாற்றியுள்ளார். மேலும், போலியாக அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றை தயாரித்து இருந்ததும் தெரியவந்துள்ளது. போலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!