Tamilnadu

“நெசவுக் கூலியை இனியாவது முழுமையாக வழங்கவேண்டும்” - நெசவுத் தொழிலாளர்கள் கோரிக்கை!

கடந்த மார்ச் மாதத்தில் துவங்கிய கொரோனா ஊரடங்கால், பல மாதங்கள் தொழில் நிறுவனங்கள் முடங்கின. நுாற்பாலை, விசைத்தறி, கைத்தறி என பல்வேறு தொழில்கள் முடங்கின. இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து, மக்கள் வாழ்வாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் காலத்தில் குறைக்கப்பட்ட நெசவுக்கூலியை மீண்டும் 100 சதவீதம் உயர்த்தி வழங்கவேண்டும் என கைத்தறி மற்றும் பட்டு நெசவுத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கைத்தறி சேலைகள், பட்டு சேலைகள் நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் உற்பத்தியாகும் பருத்தி நூல் கைத்தறி சேலைகள் பல்வேறு நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நெசவாளர்களுக்கு நூல் கிடைக்காத நிலை ஏற்பட்டு, நெசவுத் தொழில் முடங்கியது. ஊரடங்கால் கைத்தறி சேலைகள் விற்பனையின்றி தேங்கின. இதனால், உற்பத்திக் கூலி குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வர்த்தகம் சீரடைந்து வருகிறது. இதனால் மீண்டும் நெசவுத் தொழிலாளர்கள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவால் குறைக்கப்பட்ட கூலி தற்போது 80 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வருமானமின்றி பொருளாதார நெருக்கடிக்குள்ளான நெசவாளர்களின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு குறைக்கப்பட்ட கூலியை100 சதவீதம் உயர்த்தி வழங்கவேண்டும் என உற்பத்தியாளர்களிடம் நெசவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் நலிந்து வரும் நெசவுத் தொழிலை பாதுகாக்க, நல வாரியம் மூலம் நெசவாளர்களுக்கு கண்காட்சி, நேரடியான விற்பனை மையங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “எஸ்.பி.வேலுமணி அரசியலை விட்டுச் சென்றாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன்” - மு.க.ஸ்டாலின் உறுதி!