Tamilnadu

முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ ‘வெங்கலம்’ மணி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தி.மு.கழகத்தின் இளைய தலைமுறையினருக்கு தன் வாழ்க்கையையே தத்துவமாக விட்டுச் சென்றுள்ள 'வெங்கலம்' மணி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், 1962-67-இல் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற 50 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழகத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவருமான ‘வெங்கலம்’ மணி அவர்கள் மறைவெய்தி விட்டார்.

கழகமே உயிர் மூச்சு எனக் கொண்ட மணி, கடைசிவரை எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். குடிசை வீட்டை வசிப்பிடமாகக் கொண்டு, கொள்கையில் கோபுரமாக உயர்ந்து நின்றவர். முரசொலிதான் அவரது கையில் போர்வாள்.

அண்மையில் அவரது துணைவியார் மரணமடைந்த நிலையில், அந்தச் சோகமும் வேதனையும் மணியையும் நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. இறப்பிலும் தி.மு.க. கரைவேட்டியும் முரசொலி நாளிதழும் அவரிடமிருந்து பிரிக்க முடியாதனவாக இருந்தன என்பது அவரது கொள்கை உறுதிக்குச் சான்றாகும்!

கழகத்தின் இளைய தலைமுறையினருக்கு தன் வாழ்க்கையையே தத்துவமாக விட்டுச் சென்றுள்ள 'வெங்கலம்' மணி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!