Tamilnadu
நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக எண்ணும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி!
நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1998ல் தாம்பரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய பழனி எவ்வித டெண்டரும் கோராமால் 83,920 ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை மேற்கொண்டதாக கூறி அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுகளை விசாரித்த அதிகாரி குற்றச்சாட்டுகள் நிருபணம் ஆகவில்லை என அறிக்கை அளிக்கிறார். ஆனால் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் அந்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், துறை ரீதியான விசாரணை நிலுவையில் வைத்து 2001ஆம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற அனுமதித்தார்.
பின்னர் 2005ஆம் ஆண்டு தேவையில்லாமல் அவசியமில்லாமல் அவசரப்பணிகளை மேற்கொள்வதற்கான சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி 83,920 ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொண்டதற்காக அவருடைய ஓய்வூதியத்தில் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யும் வகையில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பழனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, அனைத்து விதிகளையும் பின்பற்றியே தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதில் எந்த விதிமீறலும் இல்லை என தெரிவித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், குற்றச்சாட்டு குறிப்பாணையில் இடிபாடுகளை அகற்ற லாரி அமர்த்தியது, தெரு விளக்குகளுக்கு பியூஸ் கேரியர் வாங்கியது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மின் மோட்டார் வாங்கியது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதற்காக மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, இது அவசரகால பணிகள் இல்லை என கூறமுடியாது எனவும், அசம்பாவித சமவங்களை தடுக்கும் வகையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகையையே பயன்படுத்தி இருக்கிறார் என்பதால் பழனிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்த்து அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்திற்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தபோதும் அதை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை எனவும், நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைக்கும் அதிகாரிகளின் ஐ.ஏ.எஸ். பதவியை பறிக்க வேண்டுமெனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்படியாமல் இருப்பது கடமையை தவறுவதற்கு சமமானது என சுட்டிக்காட்டியுள்ளார். நகராட்சி ஆணையராக இருந்த மனுதாரர் பழனி தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு தன் கடமையை செய்ததற்காக தண்டித்திருக்க கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !