Tamilnadu

“முன்னேற்றத்தின் சின்னமாக விளங்கிய தமிழகம் 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது” - கே.என்.நேரு குற்றச்சாட்டு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, “இந்தியாவில் முன்னேற்றத்தின் சின்னமாக விளங்கியது தமிழகம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயிகள் கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு முடங்கியுள்ளது. விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழக அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அ.தி.மு.க அரசால் பாதிப்புக்குள்ளாகி, அரசுக்கு எதிரான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

நீட், தேசிய கல்வி கொள்கை, வேளாண் சட்டங்கள், இந்தி திணிப்பு என மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 10 வரை 16,000 கிராம சபை கூட்டங்ளை தி.மு.க நடத்த உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொரு வார்டாக சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்வார்கள்.

அ.தி.மு.க அரசு வெள்ளம் வந்தபோது 2,000 ரூபாய் கொடுத்தார்கள். தற்போது பொங்கலுக்கு ரூ. 2,500 கொடுக்கப்போகிறார்கள். நாங்கள் மக்களுக்கு ரூ.5,000 வழங்குங்கள் எனக் கோரிக்கை விடுத்து வருகிறோம். தேர்தலில் வெற்றி பெறப்போவது தி.மு.க தான்” எனத் தெரிவித்தார்.

Also Read: #Mission200 : “200க்கு ஒரு தொகுதி கூட குறையக்கூடாது"- தி.மு.க நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!