Tamilnadu

“சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனை செய்ய இடைக்காலத் தடை” - ஐகோர்ட் மதுரை கிளை!

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனையில் (பேக்கிங் செய்யாமல்) விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "முந்திரி தோலில் தயாரித்த எண்ணெய்யை சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்கின்றனர். இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணெய்யை சில்லறை விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்து தான் விற்பனை செய்ய வேண்டும்.

கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனை (பேக்கிங் செய்யப்படாத) செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Also Read: அரசாணை, சுற்றறிக்கைகளை தொன்மையான தமிழ் மொழியில் வெளியிட்டால் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

மேலும்,

1) 2011ம் ஆண்டு சட்டத்தின் படி சமையல் எண்ணெய் எவ்வாறு பேக்கிங் செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது?

2) எண்ணெய்யின் தரத்தினை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன?

3. அவற்றில் அரசு ஆய்வகங்கள் எத்தனை? தனியார் ஆய்வங்கள் எத்தனை? மாவட்ட வாரியாக விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

4. இதேபோல் மற்ற மாநிலங்களில் எத்தனை ஆய்வங்கள் உள்ளன?

5) கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன?

6. விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என மாவட்ட வாரியாக தெரிவிக்க வேண்டும்.

7) பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 18ம் தேதி ஒத்திவைத்தனர்.

Also Read: குடும்பத்தினருக்காக முதல்வர் பதவியை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யும் எடப்பாடி - சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!