Tamilnadu

தலைவர் கலைஞர் பெயரிலான விருதுகளை வழங்காமல் இழுத்தடிப்பு... அ.தி.மு.க அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் கலைஞர் பெயரிலான விருதுகளை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள வழக்கில், மறைந்த தலைவர் கலைஞர் கோரிக்கையை ஏற்று கடந்த 2004ம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற அந்தஸ்து வழங்கப்பட்டதாகவும், தி.மு.க அரசின் கோரிக்கையை ஏற்று 2008ல் சென்னையிலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் துவங்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Also Read: செம்மொழி தமிழாய்வு மையத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைப்பதா? - மோடி அரசுக்கு வைகோ கண்டனம்!

அப்பொழுது முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அந்த நிறுவனத்திற்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1 கோடி ரூபாயை அன்றைக்கு வழங்கி, அந்த நிதியின் மூலமாக தமிழக வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு 'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குவதற்கு வழிவகை அன்றைக்கு உருவாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர்கள் விருது கடந்த 2010 ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்ததாகவும் மனுவில் கூறியுள்ளார்.

ஆனால், தற்போது அந்த விருதுகள், வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் எனவே உடனடியாக அனைத்து விருதுகளையும், கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் செம்மொழித் தமிழாய்வு இயக்குனர், மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 3 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Also Read: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட் திட்டவட்டம்!