Tamilnadu
விவசாயிகளுக்கு ஆதரவாக அம்பானி, அதானி நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம்: போராட்டக்களமாக மாறும் தமிழகம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 19 நாட்கள் ஆகியும் இதுவரை மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்பப்பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து விவசாய சங்கங்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய தினம் டெல்லி - ஹரியானா தேசிய நெடுச்சாலைகளைக் கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்தை சேர்ந்த வணிக நிறுவனங்களை முற்றுகையிட்டு சி.பி.ஐ(எம்), வி.சி.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகயினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் செயல்பட்டு வந்த அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்தை சேர்ந்த வணிக நிறுவனங்கள் இன்று மூடப்பட்டன. அதேபோல் பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டன. சில இடங்களில் போராட்டக்காரர்களை போலிஸார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி தலைவர்கள், “விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அதானி, அம்பானி ஆகியோருக்கு சாதகமாக இருப்பதால், அதானி, அம்பானி பொருட்களை புறக்கணிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
அதேபோல் திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலிஸார் அவர்களை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டிச.18ம் தேதி - காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவது அ.தி.மு.க அரசுக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!