Tamilnadu

போதிய வருமானம் இல்லாததால் வாடகை ஆட்டோவை திருடிய பெயின்டர் கைது... சென்னையில் விபரீதம்!

சென்னை வேளச்சேரி, டி.என்.எச்.பி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன் என்பவர் வாடகை ஆட்டோவை ஓட்டி வருமானம் ஈட்டி வந்தார். கடந்த 10ம் தேதி இரவு தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு மறுநாள் காலையில் பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருக்கிறது.

இதனையடுத்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மோகன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேளச்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது ஒரு நபர் ஆட்டோவை திருடிச் சென்றது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், ஆட்டோவை திருடியவர் மாதவரம் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் (24) என்பது தெரியவந்தது. இவர் இதற்கு முன் வேளச்சேரி பகுதியில் இருந்து வந்ததும், பெயின்டிங் தொழிலில் வருமானம் இல்லாத காரணத்தால் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவை திருடியதற்காக சதீஷ்குமாரை கைது செய்து விசாரணைக்கு பின் வேளச்சேரி போலிஸார் நீதிமன்ற காவலில் வைத்தனர்.

கொரோனா காரணமாக பலர் தொடர்ந்து வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சூழலும் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் உரிய பொருளாதார சீர்த்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: மக்களே உஷார்.. வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பு: 92,000 ரூபாய் பறிமுதல் - 3 பேர் கைது!