Tamilnadu

“ராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையே புரெவி புயல் கரையைக் கடக்கும்” - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் புரெவி புயலின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் பாம்பன் அருகில் இன்று மாலை 5.30 மணி அளவில் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது பாம்பனுக்கு தென் மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காற்றின் வேகத்தைப் பொறுத்தவரை மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

காலை முதல் தற்போது வரை அதிகபட்சமாக பரங்கிப்பேட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் , அதிராம்பட்டினத்தில் 6 செ.மீ துவாக்குடியில் 6 செ.மீ மழையும் பெய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை - தூத்துக்குடி, பெங்களூரு - தூத்துக்குடி விமான சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், புயல் கரையைக் கடக்கும் போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்பிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (டிச., 4) பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.