Tamilnadu

“விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்” : மறியலில் ஈடுபட்ட CPIM கட்சியினர் கைது!

தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், நாட்டை நாசமாக்கும் விவசாய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், உணவு உற்பத்தி செலவினங்களை இரு மடங்காக உயர்த்தும் படுபாதக வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். 2020 மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

விவசாயத்திற்கு கார்ப்பரேட்டுகளுக்கு கபளீகரம் செய்ய வழிவகுக்கும் விவசாய திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வழியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசு அலுவலகமான சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் கையாண்டு இழுத்துச் சென்றனர். போராட்டத்தின்போது அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா கூறுகையில், “நம்ம நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதற்கு வக்கில்லாமல், மத்திய மோடி அரசு, கார்ப்பரேட் நலன்களுக்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்திகிறார்கள்.

இந்த வேளாண் சட்டங்கள் இந்திய உழவர்களை நாசமாக்கும், இந்திய வேளாண்மையை சீரழிக்கும். இந்திய நாட்டிற்கும் படு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்காக இன்றைக்கு விவசாயிகள் நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடத்துவது ஒவ்வொரு மனிதனின் உரிமைக்குரல், ஆனால் கண்ணியமாக இல்லாமல் காவல்துறையினர் போராட்டக்காரர்களை இழுத்து தள்ளுவது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

தலைநகர் சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

அப்போது தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் பிடித்திருந்த பேனரை கிழித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே அங்கு தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் காவல்துறையினரின் அராஜகப் போக்கு தொடர்ந்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் குற்றம்சாட்டினார்.

அதேபோல், திருச்சி ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எல்.ஐ.சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு பாடை கட்டி போராட்டம் நடத்த வந்தனர்.

அப்போது போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பாடையை பறிக்க முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் பரபரப்புக்கிடையே போலிஸார் அவர்களை கைது செய்தனர்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் எடப்பாடி பழனிச்சாமி தன்னை விவசாயி என கூறிக்கொள்ள வெட்கப்படவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விமர்சித்துள்ளனர்.

Also Read: பருத்தி கழகத்தால் லாபம் ஈட்டும் இடைத்தரகர்கள் நெருக்கடியில் விவசாயிகள்: பிரதமருக்கு சு.வெங்கடேசன் கடிதம்