Tamilnadu

INI-CET தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: மாநில உரிமையை தாரைவார்த்த அதிமுக அரசு- டாக்டர்கள் சங்கம் கண்டனம்!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மறுக்கும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் நீட் தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய அரசு அதன் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் புதிதாக ஒரு தேர்வை நடத்துவது தவறானது என்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிராக மத்திய அரசின் போக்கு உள்ளது என்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும் மருத்துவருமான சாந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று கூறி ஒரு தேர்வை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா முழுமையிலும் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறக்கூடிய தேர்வு என மத்திய அரசு தெரிவித்துள்ளது இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.

மாநிலங்களுக்கு தேர்வு நடத்தும் உரிமையை கொடுக்க வேண்டும். அதற்கான இட ஒதுக்கீட்டை அப்போது மட்டும்தான் பூர்த்தி செய்ய முடியும். இனியாவது எடப்பாடி அரசு மாநில உரிமைகளை தாரை வார்த்துக் கொடுக்காமல் மாநில அரசே ஏற்று தேர்வை நடத்தி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் என்று தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இதுபோன்ற தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: “சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட ஒவ்வொரு நாளும் திட்டமிடும் பா.ஜ.க அரசு” - கி.வீரமணி கண்டனம்!