Tamilnadu

37 ஆண்டுகள் கழித்து நீலகிரிக்கு விசிட் அடித்த அரியவகை பறவை... ஆச்சர்யத்தில் உறைந்த ஆர்வலர்கள்!

நீலகிரி மாவட்டம் 65 சதவிகிதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இங்கு வன விலங்குகளான யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டு மாடு உட்பட அரிய வகை விலங்கினங்கள், பறவைகள், ஊர்வன வகைகள் உள்ளன.

இது மட்டுமின்றி அவ்வப்போது வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கிறது. இதில், குன்னூர் அருகே உள்ள கோலணிமட்டம் கிராமத்தில் அரிய வகையான 'Lesser Cuckoo' என்ற பறவை தென்பட்டுள்ளது. இந்த பறவை உலகளவில் பாகிஸ்தான், சீனா, ஜப்பான், வியட்நாம், வட கொரியா, தென் கொரியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் இமயமலை தொடர்கள், ஜம்மு, காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

Lesser Cuckoo வகை பறவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 அடி முதல் 3600 அடி உயரம் கொண்ட பகுதிகளில் நிலவும் காலநிலையில் வாழக்கூடியவை. குளிர் காலத்தில் நாடு விட்டு நாடு சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

இந்தியாவில் உள்ள Lesser Cuckoo பறவை குளிர் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை மற்றும் ஆப்ரிக்காவிற்கு சென்று இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வகையான பறவையினம் வார்ப்லர் போன்ற வேறு பறவைகளின் கூட்டில் முட்டையிடுகின்றன. தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோடியக்கரை, திருவண்ணாமலை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக நீலகிரி மாவட்டத்தில் Lesser Cuckoo பறவை வந்தது 1983 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் கேத்தி வேலி தொடரில் கோலணிமட்டம் என்ற இடத்தில் பதிவாகியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பணியின் போது மற்ற பறவைகள் இந்த பறவையை துரத்துவதை கண்டு அதனை மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளார். 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் அறிய வகை பறவை நீலகிரியில் பதிவானது பறவை ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீலகிரி தோடர் பழங்குடியின மக்கள் நடத்திய பாரம்பரிய திருமணம் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !