Tamilnadu

செல்வமுருகன் கஸ்டடி மரணத்தில் ஆளுங்கட்சி ஒப்பந்ததாரருக்கு தொடர்பு- வேல்முருகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் கஸ்டடி மரணத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அவரது சடலத்துடன் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், நெய்வேலி காவல் துறையினரால் விசாரணைக்கு அக்டோபர் 28 ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டு விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நவம்பர் 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 4 ஆம் தேதி மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது

நெய்வேலி காவல்துறையினர் அவரை அடித்துச் சித்ரவதை செய்ததால்தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாகவும், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆளுங்கட்சி ஒப்பந்ததாரருக்கும் செல்வமுருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதே அவரது மரணத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுங்கட்சி ஒப்பந்ததாரர் மீது புகார் அளிக்கச் சென்றபோது காவல் ஆய்வாளர் ஆறுமுகத்திற்கும் செல்வமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர், செல்வமுருகனின் மீது பொய்யான திருட்டு வழக்கு பதிந்து அடித்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டினார்.

file image

செல்வமுருகனின் மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாகத் தெரிவித்த வேல்முருகன், குடும்பத்தினர் ஒப்புதல் இல்லாமல் செல்வமுருகனின் உடலை அவசர கதியில் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய காரணம் என்ன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்னும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

மரணத்தில் உள்ள மர்மத்தை தமிழக காவல்துறை களைய வேண்டும் என வலியுறுத்திய அவர், அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் செல்வமுருகனின் உடலுடன் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

சி.சி.டிவி உள்ளிட்ட தடயங்களை அழித்து செல்வமுருகனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Also Read: செல்வமுருகன் கஸ்டடி மரண வழக்கு : தமிழக அரசும் சி.பி.சி.ஐ.டி-யும் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் ஆணை!