Tamilnadu
“செய்தியாளர் வெட்டிக்கொல்லப்பட்டது ஜனநாயகத்தின் மீது விழுந்திருக்கும் சம்மட்டி அடி”-மு.க.ஸ்டாலின் கண்டனம்
"சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் எடப்பாடி அ.தி.மு.க. அரசும், அதன் காவல்துறையும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது விழும் சம்மட்டி அடி; பத்திரிகைச் சுதந்திரம் காக்க தி.மு.கழகம் துணை நிற்கும்" என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப் போற்றப்பட்டுவரும் பத்திரிகை - ஊடகங்களின் கருத்துரிமையின் கழுத்தில், ‘அரசு கேபிள்’ என்ற கயிறு சுற்றப்பட்டு, ஆள்வோரின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களை நெரிப்பதும் நெருக்கடி தருவதும், ஆதரவாகக் குரல் கொடுத்தால் கயிறு தளர்வதும் கண்ஜாடை காட்டுவதும், தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சமூக விரோதக் கும்பலால் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் (தமிழன்) தொலைக்காட்சியைச் சேர்ந்த மோசஸ் என்ற செய்தியாளர், சென்னை - குன்றத்தூர் அருகே நடைபெறும் சமூக விரோத செயல்கள்-போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து பொதுமக்களின் கவனத்திற்கு வைத்ததால், தொடர் மிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார். இது குறித்து, காவல்நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இரவு நேரத்தில் அவரை அலைபேசியில் அழைத்து, வீட்டை விட்டு வெளியே வரச்செய்து, பேசிக்கொண்டிருக்கும்போதே அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள்.
மோசஸின் அலறல் சப்தம் கேட்டு அவரது தந்தை வெளியே வந்தபோது, சமூக விரோதக் கும்பல் ஓடிவிட்டது. குற்றுயிராக இருந்த மோசஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பச்சைப் படுகொலைக்கு எனது மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
கஞ்சா வியாபாரம் செய்வது உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுக்கு, எடப்பாடி அ.திமு.க. அரசும், அதன் காவல்துறையும் பாதுகாப்பளிப்பதும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பதும், ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடியாகும். தொலைக்காட்சிச் செய்தியாளர் மோசஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து; பத்திரிகைச் சுதந்திரம் காப்பாற்றப்பட தி.மு.கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!