Tamilnadu

“ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் அலற அலற போலிஸார் தாக்கியுள்ளனர்” : FIR-ல் சி.பி.ஐ பதிந்த பதறவைக்கும் தகவல்!

சாத்தான்குளம் பகுதியில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட தந்தை மகன் இருவரும் காவல்நிலைய விசாரணையில் கொல்லப்பட்ட சம்பவத்தில், சி.பி.ஐ விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது எப்.ஐ.ஆர் அறிக்கையை சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.

அதில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் அறிக்கையில் சி.பி.ஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக சி.பி.ஐ தாக்கல் செய்த எப்.ஐ.ஆர் அறிக்கையில், “கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி இரவு 7.30 மணியளவில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை சாத்தான்குளம் போலிஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு காவல் நிலையத்தின் அறையில், இருவரின் ஆடைகளையும் களைந்து இருவரையும் மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் கொடூரமாக காவலர்கள் தாக்கியுள்ளனர்.

வலியால் இருவரும் நிமிர்ந்துவிடக் கூடாது என்பதற்காக 3 காவலர்கள் திமிறவிடாமல் பிடித்துக்கொள்ள, ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் முத்துராஜா இருவரும் அடித்துள்ளனர். தந்தை - மகன் இருவரையும் மாறி மாறி அடித்ததில், பின் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது.

ரத்தம் சொட்டியபோதும் கூட, ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் இருவரை அடிப்பதில் இருந்து காவலர்கள் விலகவில்லை. 2 பேரின் அலறல் சப்தத்தினூடே போலிஸார் தாக்கியுள்ளனர். இரண்டு பேரின் ரத்தமும், காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளது.

அதேபோல் ஜெயராஜ், பென்னிக்ஸின் உடைகளிலும் ரத்தக்கறை படிந்துள்ளது. மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்றபோது இருவருக்கும் உடைகளை காவலர்கள் மாற்றி உள்ளனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன் 2 பேரையும் ஆஜர் செய்யும் முன்பும் உடைகளை காவலர்கள் மாற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, காவல் நிலையங்களில் சிதறிக்கிடந்த ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்தக் கறை படிந்த துணிகளை தூய்மைப்படுத்தி, ரத்த படிமங்களையும், தடயங்களையும் மறைக்க காவலர்கள் முயன்றுள்ளனர்.

மேலும், நீதிமன்றக் காவலுக்கு ஜெயராஜ், பென்னிக்ஸை அனுப்பும் முன்பு நடந்த மருத்துவ பரிசோதனையின்போது, இருவரின் காயங்களில் இருந்து ரத்தம் சொட்டிய போதும் கூட, சிறையில் அடைக்கலாம் என மருத்துவர் வினிலா சான்றிதழ் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில், போலிஸார் மிருகத்தனமாக தாக்கியதால் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: சாத்தான்குளம் காவலர்களிடம் 4 1/2 மணிநேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ - முக்கிய விவரங்கள் கிடைத்ததாக தகவல்!