Tamilnadu

பவானி ஆற்றை சூறையாடும் மணல் மாஃபியாக்கள் : ஆளுங்கட்சி ஆசியோடு நடக்கும் மணல் கொள்ளை - விவசாயிகள் வேதனை!

தமிழகத்தில் உள்ள ஆறு, குளங்கள் மற்றும் ஏரிகளில் மண் அள்ளுவதற்கு தடைவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றங்கள் கடுமையான பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.

மேலும், அரசு மற்றும் அதிகாரிகள் உரிய முறையில் சட்டங்களை அமல்படுத்தாத சூழலால், கடத்தல்காரர்களுக்கு முன் ஜாமின் கிடைக்கும் வரை காவல்துறையினரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் அவர்களை கண்டு கொள்வதில்லை என நீதிமன்றமே விமர்சித்திருந்தது.

அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலை பேணிக்காக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இனி மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் முன் ஜாமின் கோருபவர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்காது என்று கடந்த செப்டபர் மாதம் நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் கூட, உத்தரவை மீறி பல இடங்களில் மணல் திருட்டு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இந்நிலையில், தடையை மீறி பவானி ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அந்த தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரம் கடந்து காவிரி ஆற்றில் கலக்கும். பவானி ஆற்றில் பொரும்பாலான நாட்களில் தண்ணீர் தொடர்ந்து செல்வதால், பவானி ஆற்றில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது.

ஆனாலும், தடையை மீறி, மணல் மாஃபியாக்கள் இரவு, பகலாக மணலைக் கடத்திச் செல்வதாக கூறப்படுகிறது. அதுவும் ஆற்றில் கரையேறத்தில் இருந்து மணல் எடுக்காமல், பரிசல் மூலம் ஆற்றின் மையப்புள்ளிக்குச் சென்று தண்ணீரில் மூச்சை அடைக்கி வாளிகள் மூலம் மண்ணை அள்ளி, பரிசலில் கரையில் கொண்டுவந்து கொட்டிகின்றனர்.

அதன்பின் கொட்டப்பட்ட மொத்த மண்ணையும் இரவு நேரத்தில் லாரிகள், டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் கடத்திச்சென்று விற்பதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

புகார் மட்டுமின்றி, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களையும் பல நேரங்களில், சிறை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. எடுத்தாலும், பெயரளவுக்கு ஒரு வழக்குப்பதிவு செய்துவிட்டு விடுவித்து விடுகிறார்கள். இந்த மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதால், அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மணல் முக்கிய பங்கு வகிக்கும் ஆற்றையும், அதன் வளத்தை பாதுகாக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றில் ஏராளமான கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருப்பதால், மணல் கொள்ளையை அடியோடு தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “எடப்பாடிக்கும், தாது மணல் கொள்ளையர்களுக்குமான மர்ம உறவு என்ன? பேரம் என்ன?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!