Tamilnadu

“ஒரு தேர்ச்சியை வைத்து பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் பா.ஜ.க-வினர்” : ‘நீட்’ எனும் உயிர்க்கொல்லி!

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.

நீட் தேர்வு, ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கும்; எனவே நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வால் மட்டும் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர் குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடே கொந்தளித்த போது, பா.ஜ.க அரசு பிடிவாதமாக தேர்வை நடத்தியது.

நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில், முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைக் கண்டித்து பலரும் மோடி அரசாங்கத்தைக் கண்டித்து வருகின்றனர்.

இந்த சூழலில், நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்த பா.ஜ.க கூட்டத்தினர் தற்போது வெளியான தேர்வு முடிவுகளை வைத்து, பெரும் பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவன் வெற்றி பெற்றதை வைத்து பொய்ப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.

நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில், கடின உழைப்பின் மூலம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவன் ஏதோ போகிறபோக்கில் தேர்வானது போல ஒரு மாய பிம்பத்தை பா.ஜ.க-வின் ஆதரவாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவித் குமார், இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி, 664 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி நாராயணசாமி என்பவரின் மகனான ஜீவித் குமார், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.

இவருக்கு ஆசிரியை சபரிமாலா பயிற்சி மையத்தில் சேர்த்துப் படிக்க வைக்க உதவி செய்துள்ளார். இதில் பயிற்சி பெற்ற மாணவர் அகில இந்திய அளவில் 1823வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். இது சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. இதற்கு பின்னால் பலரின் உழைப்பு உள்ளது.

ஆனால், இது எதைப் பற்றியும் தெரியாமல், அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டார், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியலாக்க வேண்டாம் என பா.ஜ.கவினர் உள்ளிட்ட அரைவேக்காட்டு கூட்டத்தினர் பலரும் அரசியல் செய்து வருகின்றனர்.

பாடத்திட்டத்தில் மாற்றம், பயிற்சி மையம் என அரசு ஏற்பாடு செய்த போதும் கூட அது எல்லா அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பயந்தரவில்லை என்பதை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் சாதிப்பார்கள் என்பதற்கு ஜீவித் குமார் சாதனை ஓர் உதாரணம்.

ஆனால், எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியே! அரசுப் பள்ளி மாணவர்கள் சரியான பாடத்திட்டம், பயிற்சி மையம் இல்லாமல் தடுமாறும் நிலை காரணமாகவே, ஆண்டுதோறும் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது.

அதனை சீர் செய்ய வலியுறுத்தாமல், வெற்றி பெற்ற ஒரு மாணவனை வைத்து, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பாடம் நடத்தும் வேலையை பா.ஜ.கவினர் மேற்கொள்ள வேண்டாம் என சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. அதுமட்டுமல்லாது 18 மாணவர்களுக்கு மேல் பலியான தமிழகத்தில், இன்று கூட நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் விழுப்புரத்தில் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எனவே மாநிலக் கல்வி வழியில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்பு வழங்காமல், நீட் தனியார் பயிற்சி மையங்களில் பயிலும் வசதி படைத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள், சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிட வைப்பதால் சரிசமமான போட்டியில்லாத நிலை ஏற்படுவதால் தகுதியிருந்தும் மாணவர்கள் தேர்ச்சியடையாத நிலையே உள்ளது.

இந்த நிலை, தமிழகத்தில் இல்லாத சூழல் உருவாகும் வரை தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரவேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

Also Read: சிக்னல் கிடைக்காததால் தினமும் 3 கி.மீ மலையேறி கற்கும் மாணவர்கள் : ஆன்லைன் கல்வியால் அரங்கேறும் அவலம்!