Tamilnadu

அரசு நிலத்தை அ.தி.மு.கவினருக்கு தாரைவார்த்த அதிகாரிகள்: தூத்துக்குடியில் அராஜகம்- தி.மு.க MLA எச்சரிக்கை!

தூத்துக்குடியில் அரசு நிலத்தை ஆளும் அ.தி.மு.கவினருக்கு தாரைவார்க்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி தாலுகா அலுவலகம் டூவிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைக்காக இ-சேவை மையம், ஜெராக்ஸ் கடை, தேநீர் கடை ஆகியவை அவசியம் தேவையானது.

இதை மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்துவது வழக்கம். அதற்கு முறைப்படி டெண்டர் வைத்து வழங்க வேண்டும். இந்த நடைமுறை வழக்கத்தை மாற்றி 4 கடைகளையும் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் என்பவருக்கு மட்டும் சுமார் 3 செண்ட் இடத்தை வழங்கி உள்ளனர்.

மேலும் தற்போது உள்ள தாலுகா அலுவலகம் அருகே 10 சென்ட் இடத்தை இவர் 2017-ல் தன்னுடைய மகன் பெயரில் ஏழை கூலித்தொழிலாளி என்று மனு செய்து அதன் பெயரில் மோசடியாக பட்டா வாங்கி தற்சமயம் தன்னுடைய பெயருக்கு மாற்றியுள்ளார் எனவும் தெரியவருகிறது. இதற்கும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

அதுபோல பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு அதில் கடை வைத்திருப்பவர்களுக்கு தற்காலிக பேருந்து நிலையத்தில் தற்காலிக செட் அமைத்து கடைகள் வைத்திட மாநகராட்சி அனுமதி வழங்கியது. இதில் விதிவிலக்காக பழைய பேருந்து நிலையத்தில் மருந்து கடை வைத்திருந்த இவர் மட்டும் தற்காலிக பேருந்து நிலையத்தில் கான்கிரிட் கட்டடம் கட்டிக்கொண்டுள்ளார்.

மொத்தத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த தனிநபருக்கு அதிகாரிகள் இவ்வளவு சலுகை காட்டுவதும், விதிமுறைகளை மீறி தாலுகா அலுவலகத்தில் 4 கடைகளை ஒரே நபருக்கு வழங்கிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கடை உரிமத்தை ரத்து செய்திட வேண்டும்.

இல்லையெனில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.