Tamilnadu

“கிராம சபை கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்” - பல்வேறு அமைப்புகள் அ.தி.மு.க அரசுக்கு கோரிக்கை!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், தோழன் இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்களின் குரல், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய ஜனநாயக அமைப்புகளைச் சார்ந்தவர்கள், அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை திடீரென ரத்து செய்திருப்பதன் மூலம் கிராம சபை கூட்டங்களில் மக்கள் தங்களின் தேவைகளுக்கு தாங்களே திட்டமிடுவதை அரசு விரும்பவில்லையா எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் கடந்த கிராம சபைக்கும் இந்த கிராம சபைக்கும் இடைப்பட்ட காலத்தில் கிராம ஊராட்சிகளில் செலவு செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகள் வெளியாவதை அரசு விரும்பவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

கிராம சபை கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி தலைமைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயலர் மற்றும் அதன் இயக்குநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் தரும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் வரும் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 17 வரை கிராம சபை மீட்பு வாரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அப்போது கிராமசபை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மரக்கன்று நடுதல், அரசுக்கு மனு அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தனர்.மேலும், வரும் காலங்களில் இதனை சட்டரீதியாக அணுகவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

Also Read: கிராம சபைக்கு மாற்றாக மாறிய ‘மக்கள் சபை’ : வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுக்க தீர்மானம்!