Tamilnadu

சொந்த வாகனத்தை தானே எரித்து தீவிரவாதிகள் சதி என நாடகம் : ‘இந்து அதிரடிப்படை’ நிர்வாகி கைது!

கோபி அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜகுரு. இவர் இந்து அதிரடிப்படையின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். சுய விளம்பரம் தேடி அரசியலில் பிரபலமடையும் இந்துத்வ கும்பலைச் சேர்ந்தவர் ராஜகுரு.

இவர் கடந்த 1ம் தேதி இரவு 4 பேர் தன்னை கொலை செய்வதற்காக கத்தியுடன் துரத்தி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க வாய்க்காலில் குதித்து கரையேறி தப்பி விட்டதாகவும், தன்னை கொலை செய்யமுடியாத ஆத்திரத்தில் அந்த கும்பல் தன்னுடைய இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டுச் சென்றதாகவும் கோபி போலிஸாரிடம் புகார் மனு அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜகுருவை யாரும் துரத்திவரவில்லை என்பதையும், தன்னுடையே இருசக்கர வாகத்திற்கு தானே தீ வைத்து எரித்துவிட்டு நாடகமாடியதையும் போலிஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து ராஜகுருவை கைது செய்த போலிஸார், அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் விளம்பரத்திற்காக நாடகமாடியதாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி சிவகுமார் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற அன்று, ராஜகுரு தனது இருசக்கர வாகனத்தை எரித்துக் கொண்டிருந்தபோது, அவரே தனது செல்போனில் அதனைப் படம் பிடித்துள்ளார்.

அவரை மர்ம நபர்கள் துரத்தியதால் தப்பிக்க வாய்க்காலில் குதித்து தப்பியதாக போலிஸாரிடம் அவர் கூறினார். இதனையடுத்து விரைந்து சென்ற போலிஸார் ராஜகுருவை சந்தித்தபோது, அவரது ஆடைகள் நீரில் நினையாமல் இருந்ததைக் கவனித்துள்ளனர்.

மேலும் ஓடிச் சென்று வாய்க்காலில் குதித்து தப்பியதற்கான எந்த அடையாளமும் அவரிடமும் சம்பந்தப்பட்ட இடத்திலும் இல்லை. அதேபோல், ஓடும் வேகத்தில் காலணியை தாறுமாறாக சுழற்றிவிட்டுச் சென்றதாகக் கூறினார். ஆனால் அவரது காலணிகள் அங்கு ஒரே இடத்தில் தான் கழட்டி வைக்கப்பட்டதுபோல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்து அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, இரு சக்கர வாகனம் எரிந்து கொண்டிருப்பதை 20 நிமிடங்களுக்கு மேல் படம் பிடித்து வீடியோவாக எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீது கூகலூர் வி.ஏ.ஒ வெங்கடாசலத்திடம் இருந்து புகார் பெற்று ராஜகுரு மீது வழக்குப் பதிவு செய்து கோபி போலிஸார் கைது செய்தனர். தன்னை தீவிரவாதிகள் கொல்ல சதி என சொந்த வாகனத்தை எரித்து நாடகமாடிய ராஜகுருவின் செயலை அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர்.

Also Read: ஒருபக்கம் குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டம்.. மறுபக்கம் பொய் பிரசாரம்: பா.ஜ.க., பச்சோந்தித்தனம் அம்பலம்!