Tamilnadu

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் வீட்டை உடைத்து நொறுக்கிய அ.தி.மு.க பிரமுகர் : கன்னியாகுமரியில் அராஜகம்!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள காமராஜர் நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் 6 வருடங்களாக கணவனால் கைவிடப்பட்ட பெண் ஷீலா என்பவர் தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

அதன் அருகே உள்ள கல் குவாரியை அ.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் இஸ்ரவேல் மற்றும் அவரது மகன் ஆகியோர் பல வருடங்களாக நிர்வகித்து வந்துள்ளனர். இந்நிலையில், கனிம வளம் சட்டத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசு தடை விதித்ததால் கல் குவாரியை சட்டவிரோதமாக இயக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஏழை மக்களுக்கு அரசு வழங்கிய நிலங்களையும், வீடுகளையும் பறிமுதல் செய்வதாகவும் அ.தி.மு.க பிரமுகர் இஸ்ரவேல் மற்றும் அவரது மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், காமராஜர் நகர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காலி இடங்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக கணவனால் கைவிடப்பட்ட ஷீலாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு மூலமாகவும், அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி ஷீலா வீடு கட்டி வருகிறார்.

இந்நிலையில், நேற்று குடி போதையில் வந்த அ.தி.மு.க பிரமுகர் இஸ்ரவேல் அவரது மகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கம்பி மற்றும் பெரிய ஆயுதங்களுடன் ஷீலாவின் வீட்டை உடைத்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலிஸார் வருவதற்குள், அ.தி.மு.க பிரமுகரும் உடன் வந்தவர்களும் தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஷீலா புகார் அளித்துள்ளார். போலிஸாரும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் வீட்டை அ.தி.மு.க பிரமுகர் அடித்து நொறுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை - அ.தி.மு.க பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!