Tamilnadu

“ரவுடிகளை கட்சியில் சேர்த்து தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற பா.ஜ.க திட்டம்” : மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்!

பா.ஜ.க-வில் பிரபல ரவுடிகளை திட்டமிட்டு சேர்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“சமீப காலங்களில் பாரதிய ஜனதா கட்சியில் பிரபல ரவுடிகளை சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பாக பல்வேறு கொலைக் குற்றங்கள், கொள்ளை மற்றும் கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்ட கல்வெட்டு ரவி என்பவரை தடபுடலான ஏற்பாட்டுடன் பா.ஜ.க-வில் சேர்த்தனர்.

அதேபோன்று பல்வேறு மாவட்டங்களிலும் முக்கிய ரவுடிகளை கட்சியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. நேற்றைய தினம் சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி என்ற கிராமத்தில் பா.ஜ.க நடத்திய ஒரு விழாவில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவரது முன்னிலையில் பா.ஜ.கவில் இணைய தனது சகாக்கள் பலருடன் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர். போலிஸார் தேடுவதை அறிந்த ரவுடி சூர்யா தனது காரை அங்கேயே விட்டுவிட்டு பா.ஜ.க மாநில செயலாளர் கே.டி.ராகவன் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது சகாக்கள் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரவுடி சூர்யாவின் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் எல்.முருகன், “யார் வந்தாலும் எங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். பின்புலத்தை எல்லாம் ஆராய்ந்து பார்க்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். பா.ஜ.க தலைமை திட்டமிட்டு இவ்வாறு ரவுடிகளை, கொலைகாரர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது என்று முடிவு செய்து மாநிலம் முழுவதும் அவ்வாறாக கட்சியில் சேர்த்து வருவதாகவே தெரிகிறது.

குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் , மக்கள் ஒற்றுமையை சிதைக்கவும், மதக்கலவரங்களை உருவாக்கவும் இவ்வாறு பாரதிய ஜனதா கட்சி மிக மோசமான ரவுடிகளை கட்சியில் சேர்த்து பல்வேறு கலவரங்களை நடத்தி உள்ளது என்பதை இத்தருணத்தில் நினைவு கூர்வது அவசியம் ஆகும்.

தமிழகத்திலும் இதே நோக்குடன் ரவுடி பட்டாளங்களை கட்சியில் சேர்த்து தமிழகத்தை மதக் கலவர பூமியாக மாற்ற பா.ஜ.க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள், ஜனநாயக சக்திகள் பா.ஜ.க கட்சியின் இத்தகைய மோசமான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று மக்கள் ஒற்றுமை மேடை கேட்டுக் கொள்கிறது.

தமிழக மக்கள் பெரும்பாலும் ஜாதி, மத உணர்வுகளுக்கு ஆளாகாமல் அமைதி காத்து வரும் இந்த நிலைமையில் பாஜக போன்ற கட்சிகள் திட்டமிட்டு மதக்கலவரங்களை நடத்த இவ்வாறு ரவுடிகளை சேர்ப்பதை அனுமதிக்கக்கூடாது என்றும் இதற்கு எதிராக தமிழக மக்கள் போர்க் குரல் எழுப்ப வேண்டும் என்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வேண்டுகிறது.

குறிப்பாக வேலைவாய்ப்பு இன்றியும், பல்வேறு இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ள இளையதலைமுறையினர் பா.ஜ.க-வின் இத்தகைய வலையில் விழுவது என்பது தங்களது எதிர்காலத்திற்கு மிகவும் மோசமான விளைவுகளை உருவாக்கும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை எச்சரிக்க விரும்புகிறது.

தமிழக அரசும், தமிழக காவல்துறையும் ரவுடிகளை கொண்டு அரசியல் நடத்த விரும்பும் பா.ஜ.கவின் நடவடிக்கைகளுக்கு துணை போகாமல், உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்தகைய ரவுடிகள் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தமிழகத்தில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: மீண்டும் தொடங்கியது பொது போக்குவரத்து : டீலக்ஸ் பேருந்துகள் மூலம் கல்லா கட்ட திட்டமிடும் எடப்பாடி அரசு!