Tamilnadu

“உணவின்றி வறுமையில் வாடிய நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை” : கொரோனா ஊரடங்கால் தொடரும் கொடூரம்!

ஆரணி என்றாலே பட்டுக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணியில் பல்லாண்டு காலமாக பட்டு நெசவு தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டு நெசவாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் முள்ளிபட்டு சேவூர் அரையாளம் எஸ்.வி.நகரம் ஓண்ணுபுரம் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பட்டு தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பட்டு நெசவு தொழில் மிகவும் நலிவடைந்தன. இதனால் பட்டு நெசவு கூலி தொழிலாளிகள் வறுமையில் வாடினார்கள்.

பட்டு புடவை தயார் செய்து அதனை பட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமலும் தவித்து வந்தனர். மேலும் சில பட்டு நெசவாளர்கள் அதிக வட்டிக்கு பணம் பெற்று தற்போது கடனில் மூழ்கி தத்தளித்தனர்.

இந்நிலையில், ஆரணி அருகே உள்ள அரையாளம் கிராமத்தில் நெசவு கூலி தொழிலாளி புருஷோத்தமன் உணவின்றி வறுமையால் வாடியதால் பலரிடம் கடன் பெற்று கடன்காரனாக வலம் வந்துள்ளார்.

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த புருஷோத்தமன் வேறுவழியின்றி அரையாளம் கிராமத்தில் உள்ள வேப்ப மரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் சடலத்தை மீட்ட போலிஸார் பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரணி அருகே உணவின்றி வறுமையில் வாடிய பட்டு நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பட்டு நெசவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Also Read: திருமணத்திற்காக பெற்றோர் படும் கஷ்டத்தை பார்த்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரத்தில் நடந்த சோகம்!