Tamilnadu

“இ-பாஸ் நடைமுறையை கைவிட மறுக்கும் எடப்பாடி அரசு”: வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கும் கூலித் தொழிலாளர்கள்!

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, காலவரையறையின்றி நீட்டித்துக்கொண்டே போவதால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மத்திய அரசு அறிவித்தபடி, தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகளில் சிலவற்றிற்கு தளர்வு அளித்துள்ளபோதும், இ-பாஸ் முறையை மட்டும் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டிருக்கிறது. இதனால், கடந்த ஐந்து மாதங்களாக ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு, மக்கள் தங்களது அவசரத் தேவைகளுக்கும், வேலைகளுக்கும் கூட போக முடியாமல் அல்லல்பட்டார்கள்.

ஆனால் எதையும் கண்டுகொள்ளாத அ.தி.மு.க. அரசு, சில வாரங்களுக்கு பிறகு, விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்ற மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் இந்த அறிவிப்பும் மக்களுக்கு பெரும் சிரமத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இதனால், இ-பாஸ் முறையை தமிழக அரசு ரத்த செய்யவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், பொதுமக்கள் வெளியூர் செல்ல, வெளி மாநிலங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டால் அது மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு இன்று அறிவித்துள்ளது.

ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறோம் என்று கூறும் முதலமைச்சர் இ-பாஸ் நடைமுறையில் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை எனக் கேள்வியெழுப்பி, இ-பாஸ் நடைமுறை தொடர்பாகவும் மத்திய அரசு அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: ஆளே இல்லாத வீட்டிற்கு தகரம் அடித்து கணக்குக் காட்டும் அரசு?: இ-பாஸ் ஊழலை அடுத்து இதிலும் உண்மை அம்பலம்!