Tamilnadu

உச்சபட்ச உயர்வில் கொரோனா பலி: மேலும் 108 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.. 5,063 பேருக்கு தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் புதிதாக 52,955 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,063 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வெளி மாநில, நாடுகளில் இருந்து வந்த 28 பேர் நீங்கலாக தமிழகத்திலேயே இருந்த 5,035 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.68 லட்சத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 1023 பேருக்கும், பிற மாவட்டங்களில் மட்டும் 4,040 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக விருதுநகரில் 424 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூரில் 358, தேனியில் 292, கோவையில் 264, செங்கல்பட்டில் 245, காஞ்சியில் 220 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, மொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,349 ஆக அதிகரித்துள்ளது. இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து இதுவரையில் 2 லட்சத்து 8,784 பேர் கொரோனாவிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

ஆகவே தற்போது 55,152 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு 2 லட்சத்து 68 ஆயிரத்து 285 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.