Tamilnadu
ராஜீவ் கொலை வழக்கு: பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? - ஐகோர்ட் கேள்வி!
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ராஜிவ் கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க ஜெயின் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பன்னோக்கு விசாரணை முகமை விசாரணை நடத்தி வருவதாகவும், ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க அதன் அறிக்கைக்காக ஆளுநர் காத்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சூழலில் அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், இது போன்ற சூழலில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், ராஜிவ் கொலை வழக்கு குறித்து விசாரிக்க கடந்த 1999 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி கிருபாகரன், தற்போது அந்த விசாரணை முகமை செயல்பாட்டில் தான் உள்ளதா என சந்தேகம் எழுப்பினர். தற்போதைய விசாரணை நிலவரம் குறித்தும் கேள்வி எழுப்பினார். அப்போது, விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருவதாக சிறைத்துறை தரப்பில் விளக்கமளிக்கபட்டது.
இதையடுத்து, கடந்த 2017 மற்றம் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !