Tamilnadu

“பெரியார் பல்கலைக்கழகத்தைச் சீர்படுத்தி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்” : க.பொன்முடி வலியுறுத்தல்!

ஊழலின் உறைவிடமாக மாறிய பெரியார் பல்கலைக்கழகத்தைச் சீர்படுத்தி, உறுப்புக்கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிட வேண்டும் என உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சரும், தி.மு.க. விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான க.பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நல்லாட்சியில் உருவாக்கப்பட்டது, சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம். உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த எனக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியையும் தரத்தை மேம்படுத்தும் பணியையும் அளித்தார், தமிழக முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.

"சேலத்துச் சிங்கம்" எனப்படும் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள், தனது மண்ணில் தந்தை பெரியாரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்ததால், அதன் வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். தி.மு.கழக ஆட்சியில் கல்விப் புலத்தில் சிறப்பாக விளங்கிய பெரியார் பல்கலைக்கழகம், அண்மைக் காலமாக ஊழலின் உறைவிடமாக மாற்றப்பட்டு, பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது. இதனால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் - மாணவர்கள் உள்ளிட்டோர் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் - விரிவுரையாளர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என, பாதிக்கப்பட்டோர் தங்கள் அவல நிலையை எடுத்துரைத்துள்ளனர்.

பணிநியமனம் - பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட அனைத்து வகையிலும் நிர்வாகச் சீர்கேடுகளால் தடுமாறும் பல்கலைக்கழகத்தைச் சீர்படுத்தி, ஊழலை ஒழித்து, ஊதியமின்றித் தவிக்கும் உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் கிடைத்திட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மோடி, எடப்பாடி படத்தை பயன்படுத்தி போலி கூட்டுறவு சங்கம்” : நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது!