Tamilnadu

“உச்சநீதிமன்ற கருத்துக்குப் பிறகும்கூட ஆளுநர் 2 ஆண்டுகளாக கோப்பை நிலுவையில் வைப்பதா?” - கி.வீரமணி கேள்வி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் 28 ஆண்டுகள் சிறையில் வாடுகின்றனர். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று அமைச்சரவை முடிவு, உச்சநீதிமன்றம் கருத்து இவற்றிற்குப் பிறகும்கூட, அது தொடர்பான கோப்பில் தமிழ்நாடு ஆளுநர் கையொப்பமிடத் தயங்குவது ஏன்? இது சரியா? தாமதிக்கப்பட்ட தீர்ப்பு - மறுக்கப்பட்ட நீதி அல்லவா என்பதை ஆளுநருக்குச் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு :

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் கைதிகளான - தற்போது ஆயுள் தண்டனை களை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட எழுவரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு - முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போதே - எடுத்த முடிவு ஏனோ இன்னமும் செயல்படுத்தப்படாமல் இத்தனை ஆண்டு காலம் அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

பேரறிவாளன் போன்றவர்களை விசாரித்த காவல்துறை அதிகாரி முதல், இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் வரையில் அதில் வழக்கு விசாரணை, நீதி வழங்கியதில் ஏற்பட்ட கோணல்பற்றியும் வெளிப்படையாகவே கூறிவிட்ட பிறகும், உச்சநீதிமன்றமும் அந்த எழுவரை விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி விட்ட பிறகும், தமிழ்நாடு அரசு பரிந்துரைத்து முடிவு எடுத்த கோப்பு, ஆளுநரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்குமேல், கிடப்பில் இருப்பதுபற்றி நேற்று (22.7.2020) சென்னை உயர்நீதிமன்றம் தனது பகிரங்க அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இதன் பிறகும் அந்த ஏழு பேரின் விடுதலை தாமதிக்கப்படலாமா?

முதல்வரின் அமைச்சர்களின் காதுகளில் விழவில்லையா?

‘ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் இப்படியா?’ என்று தமிழ்நாட்டு மக்கள் பேசுவது, இந்த ‘அம்மா அரசின்’ முதல்வரின் - அமைச்சர்களின் காதுகளில் விழவில்லையா?

அரசமைப்புச் சட்டப்படி தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, அந்தப் பரிந்துரை மாநில ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக அதன்மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல், அக்கோப்புகள் தேக்கநிலையில் இருப்பதுபற்றி உயர்நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி நேற்று தனது கருத்தினைப் பதிய வைத்திருக்கிறது.

‘‘அரசின் பரிந்துரையை நிராகரிப்பதற்கோ, ஏற்றுக் கொள்வதற்கோ முழு அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆனால், நீண்ட நாள்கள் நிலுவையில் வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்புப் பதவியில் (Constitutional Posts) உள்ளவர்கள்மீதான நம்பிக்கை அடிப்படையில்தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை’’ என்பதையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா?

ஆளுநரும், தமிழக அரசும் இதுபற்றிய சீரிய முடிவினை மேலும் தாமதிக்காமல் உடனடியாக எடுக்கவேண்டும்.

மனிதாபிமானத்தோடு, நீதி கிடைக்கச் செய்யவேண்டியது முக்கியம். அவர்கள் கைக்கெட்டியது - வாய்க்கு எட்ட வேண்டாமா? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா?தமிழக அமைச்சரவை உடனே விரைந்து முடிவெடுக்கவேண்டும்!"

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Also Read: எழுவர் விடுதலை: 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இழுத்தடிக்கும் ஆளுநர்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!