Tamilnadu

சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்திற்கு வயது 128!

1892 ஆம் ஆண்டு இதே நாள் தான் சென்னை உயர்நீதிமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை உருவாக்கத்தில் மாபெரும் பங்கு வகித்த திரு. பென்னிகுவிக், பொதுப்பணி துறையின் செயலாளராக, உயர்நீதிமன்ற கட்டிடத்தின் வெள்ளி திறவுகோலை, அப்போது கவர்னராக இருந்த வென்லாக்கிடம் கொடுக்க, அவர் அந்த திறவுகோலை அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த ஜான் ஆர்தர் காலின்ஸ், கையில் கொடுத்து, சென்னை உயர்நீதிமன்ற கட்டடம் திறக்கப்பட்டது.

இந்த கட்டிடம் புனித சிலுவை வடிவில் வடிவமைக்கப்பட்டு இந்து சார்சானிக் கட்டிட கலை முறையில் கட்டப்பட்டது.

இப்பொழுது உயர்நீதிமன்றம் இருக்கும் இடத்தில் அன்று சென்னை மல்லீஸ்வரர் கோவிலும், கேசவ பெருமாள் கோவிலும் இருந்தது. இரண்டு கோவில்களும் இப்பொழுது தேவராஜ முதலி தெரு அருகில் இருக்கின்றன. அந்த கோவில் நிர்வாகங்களுக்கு மாற்று இடமும், உரிய இழப்பீடும் கொடுக்கப்பட்டது.

இன்றும் செந்நிறத்தில், சென்னை பாரிமுனையில், கம்பீரமாக, நீதியின் பிம்பமாக, உயர்ந்து நிற்கும், அழகு உயர்நீதிமன்றத்திற்கு இன்று 128 வது பிறந்தநாளாகும்.