Tamilnadu
“பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!
இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடத்தல் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2019 ஜூலை முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும், அவரது மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் 2 மகள்களின் கல்விச் செலவுக்கு ஏற்பாடு செய்யவும், இதய நோய்க்கு சிகிச்சை பெற ஏதுவாகவும் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தண்டனை கைதிகள் 2 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகே பரோல் வழங்க வேண்டும் என சிறை விதிகள் உள்ளதாகவும், தமிழ்ச்செல்வன் ஓராண்டு நான்கு மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவித்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்ச்செல்வனுக்கு ஆகஸ்ட் 7ம் தேதி வரை பரோல் வழங்கி உத்தரவிட்டனர். இந்த காலகட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பரோல் வழங்கும் சிறை விதிகள், அதிக ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கும், குறைந்த ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் ஒரே மாதிரியாக உள்ளதால், கைதிகளின் உரிமை பாதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தினர்.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!