Tamilnadu

இன்று மட்டும் தமிழகத்தில் 3,940 பேருக்கு தொற்று... 54 பேர் பலி - மதுரையையும் சூளும் கொரோனா!

கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 3,761 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 179 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே இன்று 1,992 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டுமே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று மதுரை மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்டோருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 10 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,079 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 32,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 11 லட்சத்து 10 ஆயிரத்து 402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இன்று 1,443 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்து 537 ஆக உள்ளது. தற்போது 35,656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read: 'எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்தால் தினமும் 3000 ஆக கூடுகிறது கொரோனா பாதிப்பு' - தி.மு.க தலைவர் எச்சரிக்கை!