Tamilnadu

பால் திரிந்துபோனால் மாற்றிக்கொடுக்கும் முதல்வரே... அநியாயமாக இரண்டு அப்பாவிகள் பலியானதற்கு பதில் என்ன?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கடையைத் திறந்ததாக குற்றம்சாட்டி விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் இருவரும் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஆகிய இருவரும் சிறையில் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக, ஜெயராஜ் மனைவி செல்வராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், தனது கணவரையும் மகனையும் காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், பால்துரை, ரகு கணேஷ், காவலர்கள் வேலுமுத்து, ஜேசுராஜ் சாமத்துரை, பாலா மற்றும் தொடர்புடைய நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் காவல்துறையினரின் இந்த கொடூரச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். அ.தி.மு.க அரசு காவல்துறையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது அப்பாவி மக்களைக் கொன்று குவித்த அ.தி.மு.க அரசின் காவல்துறை, இன்று அதே மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அப்பாவிகளை கொடூரமாக சித்திரவதை செய்து சிறையிலேயே கொன்றுள்ளது.

ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரின் அதிகார வெறி உயிர்களைக் குடிப்பது தொடர்ந்து வருகிறது. முன்னதாக மதுரையில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் போலிஸ் தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு நேரத்தில், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோரின் பால் பாக்கெட் திரிந்துபோன புகார்களில் துரித கதியில் செயல்பட்டு மாற்றிக் கொடுக்கும் எடப்பாடி அரசு, 2 அப்பாவி உயிர்கள் போலிஸ் பயங்காரவாதத்தால் கொல்லப்பட்டதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என்பதே பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.

Also Read: மக்களின் உயிரை பறிக்கும் காவல்துறை: மக்களாட்சியா? திரைமறைவு போலிஸ் ஆட்சியா? - மு.க.ஸ்டாலின் கேள்வி!