Tamilnadu

“எடப்பாடி அரசின் அலட்சியம்” : உணவின்றி இரண்டு நாட்களாக கேரள எல்லையில் காத்திருக்கும் தமிழக மக்கள்!

கேரள மாநிலத்தில் பணியாற்றிய தென்காசி மாவட்ட தொழிலாளர்கள் அங்கு அனுமதி பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தமிழக கேரள மாநில எல்லையான கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனைச்சாவடிக்கு வந்த நிலையில் தென்காசி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி கிடைக்காததால் அங்கு எல்லைப்பகுதியிலேயே கடந்த இரண்டு நாட்களாக உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கில் 4-வது கட்டத்தில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் வெளி மாநிலத்திற்கு தொழில் நிமித்தமாக சென்றவர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ஏராளமானவர்கள் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் , பத்தினந்திட்டா உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வந்தனர். தற்போது ஊரடங்கால் தொழில் பாதிப்பு ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த நிலையி்ல் சொந்த ஊருகளுக்கு செல்லலாம் என அரசு அறிவித்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் அந்த மாநிலத்தில் அனுமதிபெற்று சொந்த மாவட்டமான தென்காசிக்கு திரும்பி வந்தனர்.

தமிழக - கேரள எல்லையான கேரளமாநிலம் ஆரியங்காவு சோதனைச் சாவடிக்கு வந்த நிலையில் அங்கிருந்து தமிழக எல்லைக்குள் நுழைவதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் விண்ணப்பித்தும் அனுமதி வழங்கப்படாததால் அந்த தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக கேரள எல்லைப் பகுதியிலேயே உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தென்காசியைச் சேர்ந்த இளைஞர் கூறுகையில், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். கேரளாவில் இருந்து புறப்படவேண்டும் என்றால் ஈ பாஸ் வேண்டும் என்று அரசு சொன்னதும் அங்கு பரிசோதனை செய்து விட்டு அம்மாநில அரசு எங்களுக்கு தமிழகம் புறப்பட்டுச் செல்ல பாஸ் வழங்கியுள்ளது. அதனால் எந்த வித பிரச்சனையும் இன்றி தமிழக வந்துவிட்டோம்.

இப்போது தமிழக அரசு வழங்கவேண்டிய இ-பாஸை தென்காசி மாவட்ட நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. இரண்டு நாட்களாக எல்லையிலேயே காத்திருக்கிறோம். எனவே தென்காசி மாவட்ட நிர்வாகம் எங்கள் மீது அக்கறை கொண்டு உடனடியாக தென்காசி வருவதற்கான அனுமதி சீட்டை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “உ.பி செல்லவேண்டிய ரயில் ஒடிசாவுக்குச் சென்றதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிர்ச்சி” - ரயில்வே அலட்சியம்!