Tamilnadu

“பெற்ற பிள்ளையின் கல்லறையில் கண்ணீர் வடிக்க போராட்டம்” - தூத்துக்குடி ஸ்நோலினின் தாயார் வேதனை! #Sterlite

கார்ப்பரேட் நிறுவனத்துக்காக மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நடத்திய ஸ்டெர்லைட் படுகொலையின் கூக்குரல் இரண்டாண்டு கடந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. அரசின் பிரதிநிதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்நோலினின் தாயார் தனது இந்நாளில் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் 100 நாள்கள் தொடர் போரட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். போராட்டத்தின் 100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற மக்கள் பேரணியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில், போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயதான 12-ம் வகுப்பு மாணவி ஸ்நோலின், அதிகார வெறியர்களால் வாயில் சுடப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் .

இந்தச் சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று ஸ்நோலினின் தாயார் வனிதாவைச் சந்தித்து ‘விகடன்’ செய்தித்தளம் சார்பாக பேட்டி கண்டுள்ளனர். அப்போது, நினைவின் வேதனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் அவர்.

அப்போது பேசிய அவர், “ஸ்நோலின் இறந்து இரண்டு வருடங்கள் ஆனதையொட்டி அவளது கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தோம். கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்த ஆதார் அட்டையைக் காட்டவேண்டும் என போலிஸார் அறிவுறுத்தினர். பெற்ற பிள்ளையின் கல்லறையில் கண்ணீர் சிந்த எதற்கு ஆதார் அட்டை?

இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே எங்கள் வீடு, கல்லறைத்தோட்டம் என போலிஸார் இரவு பகலாக கண்காணிக்கிறார்கள். எங்கள் வீட்டுப் பக்கம் வருவோரையும் விசாரிக்கின்றனர். நாங்கள் என்ன தேசத்துரோகிகளா?

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான அதிகாரிகள், சுட்ட போலிஸார் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. என் மகளையும் சேர்த்து உயிரிழந்த அப்பாவிகளின் உயிர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை பதில் இல்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: “கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சத்ததின் எதிரொலி ஓயவே ஓயாது”: மு.க.ஸ்டாலின் ஆவேசம்!