Tamilnadu

“நள்ளிரவில் வீதிகளில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்; தொற்று பரப்ப வீசப்பட்டதா?”: அச்சத்தில் சென்னை மக்கள்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து 3023 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,458 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருப்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை வீட்டு வெளியேவராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் மேற்கு மாம்பலம் மாணிக்கம் தெருவில் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டின் முன்பு 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவம் அறிந்துவந்த போலிஸார் கீழே உள்ள நோட்டுகளை உடனே பொதுமக்கள் யாரும் எடுக்க வேண்டாம். அதில் நோய் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ரூபாய் நோட்டுக்களை வீசி சென்ற 2 பேர் யார் என விசாரணை நடத்திவருகின்றனர். வீசப்பட்ட ரூபாய் நோட்டுக்களை ஆய்வுக்காகவும் அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நோய் பரப்பும் வகையில் திட்டமிட்டு வீடுகளில் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Also Read: ராகவேந்திரா மண்டபத்தை சிகிச்சைக்கு அளிப்பதில் சிக்கல் : கொரோனா காலத்திலும் இந்த விளம்பர அரசியல் தேவையா ?