Tamilnadu
தமுக்கம் மைதானத்தை மூடுவதற்கு யாரை கேட்டு முடிவு செய்தார்கள்? - திமுக MLA பழனிவேல் தியாகராஜன் கண்டனம்!
மதுரை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தமுக்கை மைதானத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிக்காக நவீன அரங்காக மாற்றம் செய்ய தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அதற்காக 45 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு வளாகம் அமைக்க மதுரை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மேலும், மார்ச் 15ம் தேதி முதல் தமுக்கம் மைதானம் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல நூற்றாண்டு காலமாக இருக்கும் இந்த தமுக்கம் மைதானத்தை நவீன மயமாக்குவதற்கு சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமுக்கம் மைதானத்தை ஸ்மார்ட் சிட்டி பணிக்காக மூடுவது தொடர்பான அ.தி.மு.க அரசின் நடவடிக்கை குறித்து கடுமையாக சாடி பேசியுள்ளார்.
அதில், “தமுக்கம் மைதானம் வரலாற்று சிறப்புமிக்க பகுதி. ராணி மங்கம்மாள் காலத்தில் இருந்து செயல்பாட்டில் இருக்கும் இந்த மைதானத்தில் ஏராளமான அரசியல் வரலாறுகள் நடைபெற்றிருக்கிறது. தற்போது அந்த தமுக்கம் மைதானத்தின் மூலம் அரசுக்கு ஏற்கெனவே நல்ல வருமானம் வருகிறது.
அப்படி இருக்கையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பகுதியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மாற்றுவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் ஆலோசனை செய்து, கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உறுப்பினர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கென விதிமுறையே கிடையாது என உள்ளாட்சித்துறை அமைச்சர் சொல்கிறார். இப்படி ஒரு மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி அரசு எதற்காக 4 ஆண்டுகளாக காத்திருந்தது? அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் புதுப்புது திட்டங்களை அறிவிப்பது ஏன்?
ஏனெனில், தமுக்கம் மைதானத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வந்து அதன் மூலம் கொள்ளையடிப்பதே இந்த அறிவிப்பின் பின்னணி. மேலும், இந்த ஸ்மார்ட் சிட்டி பணியை 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு முடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமே இல்லை.
தமுக்கம் பகுதி என் தொகுதியாகவே இல்லையென்றாலும், என்னை பொறுத்தவரையில் இந்த திட்டம் செயல்படுத்தவேக் கூடாது. அதைவிட இந்த தமுக்கம் மைதானத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்துக்கு தகுதியில்லை.
4 மாதங்கள் காத்திருந்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பிறகு கவுன்சிலரும், மேயரிடமும் கலந்தாலோசித்த பிறகு செய்யாமல், கொள்ளையடிப்பதற்காவும், கமிஷன் அடிப்பதற்காவும் திடீரென செயல்படுத்துவது கண்டனத்திற்குரியது” என பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !