Tamilnadu
“காதல் திருமணம் செய்துகொண்ட ஒரே நாளில் கடத்தல்” - சேலத்தில் சாதிவெறிக் கும்பல் அராஜகம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கவுந்தபாடியைச் சேர்ந்த தலித் இளைஞர் செல்வம். இவர் குருப்பநாய்க்கம்பாளையத்தைச் சேர்ந்த இளமதி என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
சாதியைக் காரணம் காட்டி பெண் வீட்டில் அவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் நேற்றைய தினம் திராவிடர் விடுதலை கழகத்தினர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.
திருமணம் நடைபெற்ற இரவு அன்றே 40-க்கும் மேற்பட்டோர், திராவிடர் விடுதலைக் கழக முக்கிய நிர்வாகி காவை ஈஸ்வரன் மற்றும் உடன் இருந்தவர்களைத் தாக்கிவிட்டு, காதல் திருமணம் செய்துகொண்ட இருவரையும் காரில் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் காதல் தம்பதியரைத் தாக்கவந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து கும்பலிடம் இருந்து போலிஸார் செல்வத்தை மட்டும் மீட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் கடத்தப்பட்ட இளமதியை மீட்கும் முயற்சியில் போலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் காவல்நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொளத்தூர் மணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளிகளைக் கைது செய்யவும், அவர்களை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர். இந்த கடத்தல் செயலில் பா.ம.கவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
- 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!