Tamilnadu

“பெண்களுக்கு எதிராகப் படிந்து போயிருக்கிற ஆணாதிக்க மனோபாவத்தை மாற்றுவோம்” : தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

சர்வதேச பெண்கள் தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் இந்நிலையில் பெண்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க மகளிர் நாளில் உறுதி ஏற்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளிட்ட்டுள்ள அறிக்கையில், “இந்தியா வலிமை மிக்க நாடாகத் திகழவேண்டும் என்றால் நாட்டில் உள்ள பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தற்போது இந்தியாவில் உள்ள பெண்களில் 50 விழுக்காட்டினருக்கும் மேல் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மகளிரின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுக்க மகளிர் நாளில் உறுதி ஏற்போம்!

மகளிரின் மேம்பாட்டுக்காக எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை நடைமுறையில் எந்த ஒரு தாக்கத்தையும் நிகழ்த்துவதில்லை. நீதித்துறை உள்ளிட்ட நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இப்போதும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டே உள்ளனர். அதற்குக் காரணம் இங்கே சமூகத்தில் பெண்களுக்கு எதிராகப் படிந்து போயிருக்கிற ஆணாதிக்க மனோபாவம்தான். இதை மாற்றுவது ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பெண்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். தற்போது வேலைக்குச் செல்லும் பெண்களில் 90 விழுக்காடு பெண்கள் முறைசாரா நிறுவனங்களிலேயே பணிபுரிகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கு குறிப்பான செயல் திட்டத்தை அரசு உருவாக்கவேண்டும்.

ஒட்டுமொத்தமாகப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும் தலித் பெண்கள் மிக அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதர பெண்களைவிட தலித் பெண்களின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள் குறைவாக உள்ளதெனத் தெரியவந்துள்ளது. குழந்தைப் பருவத்தில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமை; மருத்துவ வசதிகளை எளிதில் பெற முடியாத சமூகத் தடைகள் முதலான காரணங்களால் இளம் வயதிலேயே மரணம் அவர்களைக் கவர்ந்துகொள்கிறது.

நாட்டை தாய் நாடு என அழைப்பதால் மட்டும் பெண்கள் முன்னேறிவிட மாட்டார்கள். அவர்களது ஆரோக்கியத்துக்கான திட்டங்களை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தவேண்டும். அதற்கு இந்த அனைத்துலக மகளிர் நாளில் உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “அதிகாரத்தில் பெண்கள் சமபங்கு பெறும் போதுதான் பாலின சமத்துவம் காண இயலும்”: முத்தரசன் மகளிர் தின வாழ்த்து!