Tamilnadu

ஆசிரியை தாக்கியதால் கண் பார்வையை இழந்த 8ம் வகுப்பு மாணவன்; சென்னையில் பரிதாபம்!

பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கிவருவது தொடர் கதையாகி இருக்கிறது. இதனால் மாணவர்களின் உடல் நிலையும், எதிர்காலமும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகிறது. அவ்வகையில் சென்னை மேடவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளிக்கரணைப் பகுதியைச் சேர்ந்தவர் வேலு-ரேகா தம்பதி. இவர்களின் 3 பிள்ளைகளில் மூத்த மகனான கார்த்திக் (14) மேடவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த பிப்ரவரி 4ம் தேதி வகுப்பறையில் உமா என்கிற தமிழ் ஆசிரியை கார்த்திக்கின் தலையில் இரும்பு ஸ்கேலால் அடித்துள்ளார்.

அதனால் கார்த்திக்கு காயம் ஏற்பட்டதோடு அடிக்கடி தலைவலி, கண் பார்வை கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கார்த்திக்கை அவனது பெற்றோர் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு, மாணவனை பரிசோதித்ததில் மூளையில் ரத்தக் கசிவும், கண் பார்வையும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்தும் கார்த்திக்கின் இடது கண் பார்வை பறிபோயுள்ளது. மேலும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் வேதனைக்குள்ளான கார்த்திக்கின் பெற்றோர் அவனை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

ஆனால், பள்ளி சார்பில் இதுவரையில் யாருமே கார்த்திக்கை வந்து பார்க்கவில்லை என்றுக் கூறிய தாய் ரேகா, தமிழ் ஆசிரியை ஸ்கேலால் அடித்ததாலேயே தன் மகன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் என குற்றஞ்சாட்டி, ஆசிரியையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ரேகா தெரிவித்துள்ளார்.